இதுவரை நிகழ்ந்தவை
2009 பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி
கடந்த இரண்டு வருடங்களாக சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வெற்றிகரமாக இயங்கி வரும் பாரதி தமிழ் சங்கம் http://www.batamilsangam.org/ இந்து தர்மத்தினை அடியொற்றி இயங்கும் உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் சார்பாக பாரதப் பண்பாட்டின் செழுமையை விளக்கும் பல்வேறு பண்டிகைகளும் கொண்டாடப் பட்டு வருகின்றன. பல்வேறு சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 17ம் தேதி அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவிலின் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக பொங்கல் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. தனது வரவேற்புரையில் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், எவ்வாறு பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி என்ற பெயரில் அனைத்து இந்தியாவிலும் ஒரே விதத்தில் கொண்டாடப் படுகிறது என்பதையும், எவ்வாறு பொங்கல் விழா நம் பாரதப் பண்பாட்டை காஷ்மீர் முதல் குமரி முதல் ஒருங்கிணைக்கும் ஒரு கலாச்சார அடையாளத் திருவிழா என்பதையும் விளக்கினார்.
குழந்தைகள் ராஹுல் பரத்வாஜ், ஸ்நேகா கீதாகிருஷ்ணன், சூர்யா சுந்தரேஷ் ஒருங்கிணைந்து அற்புதமாகப் பாடிய கடவுள் வாழ்த்துடனும் செல்வி கீர்த்தனா ஸ்ரீகாந்த்தின் இனிய கடவுள் வாழ்த்துப் பாடலுடனும் பொங்கல் திருநாள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கர்நாடக இசைப் பாடல்கள், வாத்திய இசைகள், சேர்ந்திசைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. வளைகுடாப் பகுதி வளரும் இளம் தமிழ் கலைஞர்களின் சாதனைகளைப் அரங்கேறின.
கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் குழுவினர்களின் இனிய குரலில் சொளந்தர்ய லகரியின் தமிழ் வடிவப் பாடல்கள் பாடப் பெற்றன. நடராஜரைத் தொழுது சுகந்தா ஐயர் குழுவினர் வழங்கிய ஒருங்கிணைந்த நாட்டியம் காண்போரை மெய்மறக்கச் செய்தன. தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகவும் கடந்த மார்கழித் திருநாளைப் போற்றும் விதத்திலும், ஆண்டாளின் திருப்பாவைக்கு அற்புதமாக அபிநயம் செய்து ஒரு சிறப்பான பரத நாட்டிய விருந்தினை வழங்கினார் அஜிதா. அஜிதாவின் தனிப் பாடலைத் தொடர்ந்து மாடு மேய்க்கும் கண்ணா என்ற ஒரு காவடிச் சிந்து பாடலை அருமையாக நாட்டியத்தில் கொணர்ந்து சபையோரின் கரகோஷத்தை அள்ளிச் சென்றார் செல்வி ஷ்ருதி அரவிந்தன்.
பரத நாட்டியங்களைத் தொடர்ந்து கொஞ்சும் மைனாக்களே என்ற இனியத் திரை இசைப் பாடலைத் தன் நடனத்தினால் மெருகேற்றினார் செல்வி. ஹரிப்ரியா சுந்தரேஷ். பரத நாட்டியம், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளைத் தொடர்ந்து சிறுவர்கள் வாத்தியங்களில் தங்கள் திறமையினைக் காண்பித்தார்கள். செல்வன் விஷால் சாக்சோஃபோன் வாத்தியத்தில் மஹா கணபதி என்ற பாடலை வாசித்து தன் திறமையை வெளிக் காண்பித்தார். செல்வன் சுபாஷ் ரமேஷ் பல சினிமாப் பாடல்களின் துடிப்புக்களை தன் அற்புதமான டிரம்ஸ் வாசிப்பில் நிகழ்த்திக் காண்பித்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர் கல்பகம் கொளசிக் அவர்கள் ஒரு சிறிய விநாடி வினா நிகழ்ச்சி ஒன்றினை வழங்கி தமிழ் நாட்டில் இருந்து சாதனை படைத்த பல அறிஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார்கள். தீபா மஹாதேவன் மற்றும் கல்பகம் கவுசிக் இணைந்து அம்புஜம் கிருஷ்ணன் அவர்கள் இயற்றிய ஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை தங்கள் அருமையான குரல் வளத்தில் பாடினார்கள். செல்வன் ஹரிஹரன் சுப்புராஜ் பல்வேறு சுலோகங்களை அழகாகப் பாடினார்.
பொங்கல் நிகழ்சியின்போது எடுக்கப்பட்ட ஏனைய ஒளிப்படங்களை இங்கே காணலாம்: (கிளிக் செய்தால் பெரிதாகக் காணலாமே!)
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பல் வேறு வகையிலான பொங்கல்களும், பிற சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி அன்று சன்னிவேல் இந்துக் கோவிலில் வைத்து வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு தினத்தை பாரதி தமிழ் சங்கம் மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர் கோவிந்தராஜன் அவர்களை 408 394 4279 என்ற எண்ணிலும் சுந்தர் அவர்களை 408 390-5257 என்ற எண்ணிலும் அணுகலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், விபரங்கள் அறியவும் bharatitamilsangam [at] yahoo [dot] com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்
பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்| நவம்பர் 2008
நவம்பர் 2, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித்திருநாள் கொண்டாட்டம் சன்னிவேல் ஹிந்துக் கோவில் கலையரங்கத்தில் நடந்தேறியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்புரையில் தீபாவளித் திருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கலாசார அடையாள நாள் என்பதைக் குறிப்பிட்டு, இத்திருவிழா அமெரிக்க காங்கிரஸாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஃப்ரீமாண்ட் நகரவை உறுப்பினர் அனு நடராஜன் அவர்கள் தலைமை ஏற்றுச் சிறப்புரையாற்றினார். பாரதி தமிழ்ச் சங்கத்தின் கலைப்பணியைப் பாராட்டிப் பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடங்கி விடாமல் அமெரிக்க சமூக அரசியல் தளங்களில் அமெரிக்காவாழ் தமிழ்ச் சமூகம் தன்னம்பிக்கையோடு வெளிவந்து பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டது, பாரதி தமிழ்ச்சங்கத்தின் விருதுவாக்கான 'வையத் தலைமைகொள்' என்ற பாரதியின் கூற்றை அடிக்கோடிடுவதாக அமைந்தது.
விநாயகர் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பாரதியார் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல், மிருதங்க பக்க வாத்தியத்துடன் கூடிய பாடல், பரதநாட்டியம், குச்சிபுடி என்று அடுத்தடுத்து வந்த நிகழ்ச்சிகள் வளரும் தலைமுறையின் கலையார்வத்தைப் பறை சாற்றின. சிறு குழந்தைகளின் குறத்தி நடனம், புல்லாங்குழல் இசை, கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு, திரையிசை நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகளால் அரங்கமே களைகட்டியது. தீபா மஹாதேவன் அவர்கள் இயக்கத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. சுகி அவர்கள் இயக்கிய 'கைலாயத்தில் அவ்வையார்' நாடகம் அருமையான உடை மற்றும் மேடை அலங்காரங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அடுத்தவாரம் அமெரிக்கத் தேர்தல் என்ற நிலையில், மெக்கெய்ன் ஒபாமா தொலைக்காட்சி விவாதங்களை வைத்து கோமதி அவர்களது இயக்கத்தில் உருவான 'தேர்தல் சரவெடிகள்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அரங்கத்தில் சிரிப்பலைகளை உண்டாக்கியது. கட்டபொம்மன் வசனங்களைச் சிறு குழந்தைகள் உணர்ச்சிகரமாகப் பேசி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் கைதட்டல்களை அள்ளியது. நிகழ்ச்சியின் முடிவில் சுகந்தா ஐயரின் இயக்கத்தில் உருவான பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற பாரதியின் பாடலுக்கு சஹானா கிருபாகரனின் அருமையான நடனம் சபையோரைக் கட்டிப்போட்டது. பிரமிளா நடராசனின் இயக்கத்தில் உருவான 'ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்' என்ற புதுமையான நிகழ்ச்சியில் இரு அணிகள் கர்நாடக மற்றும் திரையிசைப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றின் ராகத் தொடர்பினைப் பாடிக்காட்டினர். ஆறுமுகம் மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒளிப்படம் பிடிக்க, ஸ்ரீகாந்த், கிருத்திகா ஆகியோர் நிகழ்ச்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கினர். பின்னர் அருண் விஸ்வநாதனின் ஒருங்கிணைப்பில் நடந்த வளைகுடாப்பகுதியின் பிரபல இசைக்குழுவான 'சஹானா' குழுவின் இன்னிசைக் கச்சேரி பெரும் வரவேற்பைப் பெற்றது. 'மன்றம் வந்த தென்றலுக்கு', 'சங்கீத மேகம்', 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்', 'வான் மேகம் பூப்பூவாய்' போன்ற என்றும் இனிய பாடல்களிலிருந்து இன்றைய ஹிட் பாடலான 'நாக்கு மூக்கா' வரை பல பாடல்களைப் பாடி கைதட்டல்களை அள்ளிச் சென்றது சஹானா இசைக்குழு. அருண் விஸ்வநாதனின் பல்குரல் வித்தகம் பெரும் வரவேற்பைப்பெற்றது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பாரதி தமிழ்ச்சங்க முத்திரை பொறித்த பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியின் இடையிடையே குலுக்கல் முறையில் வந்திருந்தோர் பலருக்கும் பலவிதப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட, ஏறக்குறைய ஐந்நூறு பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்தது.
~ சுந்தரேஷ்
ஸர்வதாரி தமிழ்ப் புத்தாண்டு விழா
பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஸர்வதாரி வருட தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டம் 2008 ஏப்ரல் 27 அன்று கலிஃபோர்னியா சன்னிவேல் ஹிந்து கோவில் அரங்கத்தில் விமரிசையாக நிகழ்ந்தேறியது. அருணகிரி நாதரின் "முத்தைத்திரு பத்தித் திருநகை" பாடலை ஸெல்ஸி சிம்ரன் ராஜ் இறை வணக்கமாகப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். பாரதி தமிழ்ச் சங்க தலைவர் கோவிந்தராஜனின் வரவேற்புரையை அடுத்து குழந்தைகளும் பெரியவர்களும் பங்கேற்ற பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மூன்று வயது சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு திறமைகளை எல்லோரும் ரசிக்கும் வகையில் வெளிக்காட்டி மாலைப்பொழுதை இனிதாக்கினார்கள். வாய்ப்பாட்டு, வாத்திய இசை முதல் பக்திப்பாடல்கள், பாரத பாரம்பரிய நடனங்கள் தொடர்ச்சியாக திரைப்பட நடனங்கள் வரை அனைத்து நிகழ்ச்சிகளும் வந்திருந்தோரை பிரமிக்க வைத்தன. பரத நாட்டிய ஆசிரியைகளான தீபா மகாதேவன், விஷால் ரமணி, குச்சிப்புடி ஆசிரியை ஹிமபிந்து சல்லா, ஒருங்கிணைத்து பங்கெடுத்த அஜிதா,மல்லிகா, அரவிந்த், அகிலா, சிறார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த வித்யா பாண்டியன், கல்பனா பழனிச்சாமி, நித்யா, ஷர்மிளா ரவிசங்கர், ஜெயா ஜுலியட், ஜெயஸ்ரீ கார்த்திக், உஷா அரவிந்தன், சாந்தி சாம்பசிவம், உமா ஸ்ரீராம், சந்திரா விஸ்வாதன் ஆகியோரின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியை அருண் விஸ்வநாதன் தன் பல்குரல் திறமையின் மூலம் சுவாரஸ்யமாகத் தொகுத்தளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவு கூறும் வகையில் அவரது சிறுகதையான "நிஜத்தைத் தேடி", நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. சித்ரா கருணாகரனின் மேடை அமைப்பு, முகுந்தனின் பின்னணி இசை, பாலாஜி சீனிவாசனின் நாடக இயக்க உதவி ஆகியவை மூலம் வெற்றிகரமாக உருவான இந்தக் குறுநாடகத்தில் ஸ்ரீகாந்த், கௌரி, ராம்கி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.
கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான பாரதி தமிழ்ச்சங்கம் கலை நிகழ்ச்சிகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், நாடகப்பட்டறை என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வளைகுடாப்பகுதியின் இளைய சமுதாயத்திற்கு சிறந்த தொண்டாற்றி வருகிறது. தமிழ்ப்புத்தாண்டு விழா பாரதி தமிழ்ச்சங்கத்தின் முதல் வருட நிறைவு விழாவாகவும் அமைந்தது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.
தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது எடுக்க்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்
பாரதி தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் திருவிழா
சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வரும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், கடந்த ஃபிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை, சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள இந்துக் கோவில் கலையரங்கத்தில் பொங்கல் திருவிழா மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. டாக்டர் கல்பகம் கௌசிக் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.90.1 எஃப் எம் இட்ஸ் டிஃப் வானொலியின் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா தன் கலகலப்பான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் நிகழ்ச்சியை சுவாரசியமாகத் தொகுத்து வழங்கினார். பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி ராகவேந்திரன் சங்கத்தின் நோக்கங்களைக் கூறி, வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர்களும் பெரியவர்களும் பங்கு கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றன. 500க்கும் மேற்பட்ட வளைகுடாப் பகுதி தமிழர்கள் கோவிலின் பெரிய கலையரங்கம் நிறைய அமர்ந்து கண்டு களித்தனர்.
கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து தேசத்தினைப் போற்றும் பாரதியின் வந்தே மாதரப் பாடலை மீனா வெங்கடேஷ் பாடினார். பாடல் முடிந்தவுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவையோரை வந்தே மாதரம் என்று தன்னுடன் சேர்ந்து முழங்கச் சொல்ல, அரங்கமே அதிரும் அளவுக்கு பார்வையாளர்கள் வந்தே மாதரம் என்று பாரத மாதாவை வாழ்த்தினார்கள். தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், கர்நாடக சங்கீதம் பாடினார், காய்த்ரி ராமநாதன், ராஜேஸ்வரி ராமநாதன் குழுவினர் நடனம் ஆடினார்கள். தொடர்ந்து திருமதி சுகி அவர்களின் இயக்கத்தில் குழந்தைகள் பொங்கல் நாட்டியமும் கொன்றை வேந்தன் பாடல்களும் அடங்கிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். தொடர்ந்து மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பார்த்தசாரதியாக ஆகும் நிகழ்வை ஒரு சிறிய நாடகம் மூலம் சின்னஞ்சிறுவர்களைக் கொண்டு அழகாக இயக்கி நடத்தினார் சித்ரா கருணாகரன். தொடர்ந்து அக்ஷயா நரேஷ், நிகில் வைத்யா இருவரும் புல்லாங்குழல், தபலா இசை வழங்கினார்கள். பாரம்பரிய இசை நாட்டிய நிகழ்சிகளின் நடுவே ஒஜாஸ் மந்த்ரா குழுவினரின் நடனமும், நித்யவதி சுந்தரேஷ் இயக்கத்தில் சிறுவர்கள் ஆடிய பல்லேலக்கா என்ற நடனமும், ஹரிப்ரியா சுந்தரேஷ் இயக்கத்தில் சிறு குழந்தைகளின் திரையிசை நடனமும் இடம் பெற்றன. திரையிசைப் பாடல்களைத் தொடர்ந்து சாந்தி சதீஷ் ஒருங்கிணைப்பில் பக்திப் பாடல்களுக்குச் சிறுவர்கள் ஆடிய நிகழ்ச்சி அரங்கேறியது. தீபா மகாதேவன் ஒருங்கிணைப்பில் அவரது நாட்டியக் குழுவினர்கள் மூன்று பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிறுவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகத் தங்கள் கலைத் திறமையினை வெளிக்காட்டி அரங்கத்தினரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றனர். நாட்டியக் குழுவினர் அனைவரும் சிறப்பான அபிநயமும், பாவமும் காட்டி தாள கதி தப்பாமல் நாட்டியம் ஆடி மகிழ்வித்தனர். சுகி அவர்கள் குழுவினர் பொங்கல் திருநாளின் பாரம்பரிய வடிவத்தை மேடையில் சிறப்பாகக் கொண்டு வந்திருந்தனர். உச்சரிப்புச் சுத்தத்துடன் தமிழில் பேசி சிறுவர்கள் நடத்திய மகாபாரத நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் ஆடல்களும் ஒரு இனிய கலை அனுபவத்தை அளித்தன.
இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அருண் விஸ்வநாதன் சுவையான பல குரல் நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த ஸ்ரீகாந்த்தும் பழம்பெரும் நடிகர்கள் பாலையா, சிவாஜிகணேசன் குரல்களில் பேசி மிமிக்ரி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அருண் விஸ்வநாதன் தன் அநாயசமான குரல் வளத்தாலும் நடிப்புத் திறமையாலும் அரங்கத்தின் கரகோஷத்தைப் பெற்றார். பார்வையாளர்களின் கோரிக்கையின் பேரில் ரஜினி காந்தின் குரலில் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டார். கமலஹாசன், ரஜினி, பாரதிராஜா, சாலமன் பாப்பையா, பாக்யராஜ் என்று பலரது குரல்களிலும் மாற்றி மாற்றிப் பேசி ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளினார்.
சிற்றுண்டி இடை வேளையைத் தொடர்ந்து கலவை வெங்கட் அவர்கள் சிறுவர்களுக்கான ஒரு வினா விடை நிகழ்ச்சியினை நடத்தினார். இந்து மதப் புராணங்களில் இருந்தும், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றியும் கேள்விகள் இடம் பெற்றன. சுக்ரீவனின் சகோதரன் யார், சிதம்பரம் கோவிலில் என்ன கடவுள் உறைகின்றார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் மூன்று குழுவாகக் கலந்து கொண்ட 12 சிறுவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சரியாகப் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக வளைகுடாப் பகுதியின் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்ட 'குழந்தைகளின் கல்வியில் பெரிதும் துணையாக இருப்பது தாயே, தந்தையே" என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் நடந்தேறியது. நடுவர் திருமுடி துளசிராமன் தனது சுவையான பேச்சுத் திறமையினால் இரண்டு குழுக்களையும் ஒருங்கிணைத்துத் தத்தம் வாதங்களை எடுத்துரைக்க அழைத்தார். தாயே என்ற தலைப்பில் நித்யவதி சுந்தரேஷ், சாந்தி, கௌரி ஆகியோரும், தந்தையே என்ற தலைப்பில் முரளி ஜம்பு, கார்த்திக், சங்கர் ஆகியோரும் திறம் பட பேசினார்கள். தந்தைகளின் பொறுப்பின்மை, பொறுமையின்மை பற்றி தாய்மார்களும், தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் செல்லம், அக்கறையின்மை குறித்துத் தந்தைமார்களும் சுவையாக விவாதம் புரிந்தனர். சம காலத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் வாழ்வில் இருந்து சுவாரசியமான உதாரணங்கள் எல்லாம் காட்டி மிகத் திறமையாகப் பேசி அரங்கத்தினர் தொடர்ந்த கரவொலியையும் ஆதரவினையும் இரு தரப்பினரும் பெற்றனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சுந்தரேஷ் எழுதிய 'தமிழ் ஏன் கற்க வேண்டும்?' என்ற கட்டுரையும், இந்து மதம் பற்றிய 'உங்களுக்குத் தெரியுமா?' என்ற வினா விடை அடங்கிய கையேடும் வழங்கப் பட்டன. நன்றியுரையில் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், கலந்து கொண்ட அனைவருக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும், நிதியுதவி புரிந்த ஸ்பான்சர்களுக்கும் நன்றி தெரிவித்து அடுத்து வரும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரும் அமைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கக் கோரினார்.
பாரம்பரிய இசை, ஆடல், பாடல், கிராமியக் கலைகள்., நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் கலந்து தமிழ் நாட்டுக் கிராமம் ஒன்றில் இனிய முறையில் பொங்கலைக் கொண்டாடிய மகிழ்ச்சியினை நிகழ்ச்சி அளித்தது. நடனமும், இசையும், வாதப் பிரதிவாதங்களும் சேர்ந்து அன்றைய மாலைப் பொழுதினை ஒரு மறக்க முடியாத இனிய மாலைப் பொழுதாக மாற்றின. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இறுதி வரை கலந்து கொண்டு ஏகோபித்த ஆதரவு அளித்து நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
பாரதித் தமிழ் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும், கோடை விடுமுறைகளின் பொழுது சி றார்களுக்கான வகுப்புகளும் வழங்க இருக்கிறது. இந்த அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் விரும்புபவர்கள் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜனை 408 394 4279 என்ற எண்ணிலும் , bharatitamilsangam@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.
2007ம் ஆண்டு தீபாவளி நிகழ்ச்சி
வளைகுடாப் பகுதியில் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் ஃப்ரீமாண்ட் கோவில் சரஸ்வதி அரங்கில், நவம்பர் 19 தேதி தீபாவளித் திருவிழா கொண்டாடப் பட்டது. டாக்டர் கற்பகம் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சவுந்தர்ய லகரி குழுவினர் தமிழில் இயற்றப் பட்ட சொளந்தர்ய லகரி பாடல்களைச் சிறப்பாகப் பாடி நிகழ்ச்சியை துவக்கினார்கள். தொடர்ந்து செல்வி கீர்த்தனா வாய்ப்பாட்டு, அக்ஷ்யா நரேஷ் குழுவினரின் புல்லாங்குழல், அஜிதா இயக்கத்தில் வெற்றி எட்டுத் திக்கும் என்ற நாட்டிய நாடகம் நடை பெற்றது. சிறுவர்களின் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரு.கலவை வெங்கட், "அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம் அன்றும், இன்றும் இனி என்றென்றும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், பாரதி தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கினார். சொற்பொழிவைத் தொடர்ந்து திரு.நாகவேந்திரன் கலிஃபோர்னியா பாடத் திட்ட பிரச்சினைகள் குறித்தும், வழக்கின் தற்பொழுதைய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். உரைகளைத் தொடர்ந்து திவ்யா மோகன் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல், தீபா மகாதேவன் குழுவினரின் நடனம், நித்தியவதி குழுவினரின் நாட்டியம் ஆகிய சிறுவர் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. சிறுவர்களின் நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் தவிர சித்ரா கருணாகரன் குழுவினரின் ராமாயண நாடகமும், லதா ஸ்ரீநிவாசன் குழுவினரின் சிந்துநதியின் இசை எனும் பாஷன் ஷோவும், கொளரி சேஷாத்ரி குழுவினரின் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடை பெற்றன. சிறுவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் திறமையினை வெளிக்காட்டினார்கள். ஆடல், பாடல், புல்லாங்குழல் வயலின் இசைகளுடன் தீபாவளி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அரங்கேறியது. சிறுவர்களுக்காக ஓவியப் போட்டியும், மகளிருக்காக ரங்கோலிப் போட்டியும் நடத்தப் பெற்று பரிசுகள் வழக்கப் பட்டன. அரங்கு நிறைந்த விழா நன்றி அறிவிப்பு மற்றும் பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. பாரதி தமிழ் சங்கம் சார்பில் தொடர்ந்து மார்கழி மாத ஆண்டாள் திருப்பாவை, பொங்கல் விழாவினை ஒட்டி நாட்டிய நிகழ்ச்சி போன்றவை நடை பெற இருக்கின்றன.



















